அரசு பஸ் சேவை மீண்டும் தொடங்கியது

கோத்தகிரி-ஓடேன் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-01-24 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி-ஓடேன் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரசு பஸ் நிறுத்தம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஓடேன் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு வரை கோத்தகிரியில் இருந்து அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா பாதிப்புக்கு பின்னர் அரசு பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் ஓடேன், ஜக்ககம்பை கிராமத்திற்கு செல்லும் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அந்த வழியாக நடந்து சென்று வர பெரும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து தங்களது கிராமத்திற்கு மீண்டும் அரசு பஸ்சை இயக்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம மக்கள் சுற்றுலாத்துறை அமைச்சரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சேைவ தொடங்கியது

இதைத்தொடர்ந்து நேற்று முதல் ஓடேன் கிராமத்திற்கு 2 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அரசு பஸ் இயக்கப்பட்டது. இதையொட்டி ஓடேன் கிராமத்தில் மக்கள் பஸ்சுக்கு சிறப்பு பூஜை செய்து, பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இந்த பஸ் கோத்தகிரியில் இருந்து உல்லத்தட்டி, ஜக்ககம்பை வழியாக ஓடேன் கிராமத்திற்கு இயக்கப்படுகிறது. கோத்தகிரியில் இருந்து காலை 6.50 மணிக்கும், மாலை 6 மணிக்கும் பஸ் இயக்கப்படுகிறது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நிகழ்ச்சியில் காவிலோரை பீமன், ஊர் தலைவர் சண்முகம், காந்தி போஜன், ஓடேன் ரவி, ராஜி, ரமேஷ், ஜெயக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்