அரசு ஊழியர்கள், ஏழை மக்களுக்கு என்றும் தி.மு.க. ஆதரவாக இருக்கும்

அரசு ஊழியர்கள், ஏழை மக்களுக்கு என்றும் தி.மு.க. ஆதரவாக இருக்கும் என நாகா்கோவிலில் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

Update: 2022-12-10 21:35 GMT

நாகர்கோவில்:

அரசு ஊழியர்கள், ஏழை மக்களுக்கு என்றும் தி.மு.க. ஆதரவாக இருக்கும் என நாகா்கோவிலில் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

பொதுக்குழு கூட்டம்

குமரி மாவட்ட ஓய்வு பெற்ற போலீஸ் துறை அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சாம் நெல்சன் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சின்னத்தம்பி, மாணிக்க ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓய்வு பெற்ற போலீசார் பல ஆட்சிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களை பார்த்து இருப்பீர்கள். நீங்கள் பல அனுபவங்களை கொண்டவர்கள். உங்களது அனுபவம் இளைய தலைமுறையை வழிநடத்த மிகவும் தேவை. தமிழகத்திலேயே ஓய்வு பெற்றவா்களுக்கு என சங்கம் உருவாக்கப்பட்டது தி.மு.க. ஆட்சியில் தான். ஊதிய முரண்பாடுகளை நீக்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்தது.

தி.மு.க. ஆதரவாக இருக்கும்

அதன்படி தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் போலீஸ் துறை மீது அதிக ஈடுபாடு கொண்டவர். ஏனெனில் போலீசார் தங்களது குடும்பம், வீடு ஆகியவற்றை மறந்து மக்களுக்காக பணியாற்றுபவர்கள். போலீசாரின் குறைகளை நிறைவேற்றுவதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வமாக உள்ளார். கடைநிலை ஊழியர் முதல் அரசு அதிகாரிகள் வரை என்னென்ன கோரிக்கைகள் உண்டோ அவற்றை ஆராய்ந்து உடனே நிறைவேற்ற கமிட்டி அமைத்துள்ளார். தி.மு.க. அரசு என்றும் ஏழை, எளிய மக்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் ஆதரவாக இருக்கும். ஓய்வு பெற்ற போலீசாரின் கோரிக்கைகளை ஆராய்ந்து அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், சங்க மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் கிறிஸ்டோபர், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர் நல வாரியத்தை விரைந்து செயல்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறையில் உள்ள தேர்வுகளில் போலீசாரின் வாரிசுகளுக்கு 10 சதவீதம் உள் இட ஒதுக்கீடு ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும்.காவலர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணுவத்தினருக்கு வழங்குவது போல ஒரு பதவிக்கு ஒரு ஊதியம் என்ற முறையில் போலீஸ் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்க வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவப்படி ரூ.1000 வழங்குவது போல தமிழக அரசும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்