நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
நாமக்கல்லில் கட்டி முடிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்து உள்ளது. இங்கு மருத்துவக் கல்லூரிக்கான 5 கட்டிடங்கள் சுமார் ரூ.112 கோடியிலும், மருத்துவமனைக்கு உரிய 9 கட்டிடங்கள் ரூ.157 கோடியிலும், டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் தங்கும் வகையில் 8 இருப்பிட கட்டிடங்கள் ரூ.69 கோடியிலும் கட்டப்பட்டு உள்ளன.
இந்த மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று, திறம்பட செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை கட்டிடங்கள் வாகனம் நிறுத்தும் தளம் மற்றும் தரைத்தளத்துடன் கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடம் கட்டி சுமார் 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
ரூ.7 கோடியில் குடிநீர் திட்டம்
இந்த மருத்துவமனைக்கு தேவையான 15 லட்சம் லிட்டர் தண்ணீரை காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வருவதற்கு சுமார் ரூ.7 கோடி நிதி தேவைப்படுகிறது. அந்த நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கிடைத்து விட்டாலும், இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. எனவே மருத்துவமனை திறப்புவிழா தள்ளி கொண்டே போகிறது. மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வசதியாகவும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இது குறித்து குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அரசு மருத்துவமனைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு கிடைத்து விட்டது. பல துறைகளை கடந்து நிதியை பெற வேண்டி இருந்ததால் சற்று காலதாமதம் ஏற்பட்டு விட்டது. தற்போது ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு உள்ள நிலையில் மருத்துவமனைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான திட்டப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த பணியை 6 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.
வருத்தம் அளிக்கும் செய்தி
இது குறித்து சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்ட மக்களுக்காக கட்டப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உடனடியாக திறக்கப்பட வேண்டும். மருத்துவமனை கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அதிநவீன மருத்துவமனை திறக்கப்படாமலும், மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதும் வருத்தமளிக்கும் செய்தியாகும்.
நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பாட்டுக்காக அதிநவீன மருத்துவக்கருவிகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மருத்துவமனை திறக்கப்படாமல் இருக்க என்ன காரணம் என்று கேட்கையில், போதுமான குடிநீர் பயன்பாட்டு வசதி செய்து முடிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவனத்தினர் ஒரு கட்டிட வேலை செய்யும் முன்பே அந்த கட்டிடத்துக்கான போர்வெல் அல்லது தண்ணீர் வசதி செய்து கொண்டு தான் கட்டிட வேலையை தொடங்குகிறார்கள்.
ஆகவே இந்த மருத்துவமனைக்கு என தனியாக நடைபெற உள்ள குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டில் இல்லாத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற பெரிய கட்டிட வேலைகள் தொடங்கும் முன்பே தண்ணீர் வசதி ஏற்படுத்திக்கொண்டு செய்தால், உடனடியாக அக்கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.
பஸ் வசதி
நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை தலைவர் டி.எம்.மோகன்:-
சாதாரண ஏழை மக்கள் வியாதிகளுக்கு மருத்துவம் பார்க்க, நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை தான் நாடி செல்கின்றனர். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு இன்னும் வராத காரணத்தால், அதிநவீன மருத்துவம் தேவை என்றால் மக்கள் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்கு கோவைக்கும் செல்கின்ற சூழ்நிலை ஏற்படுகின்றது.
அதனால் அலைச்சலும், நேர விரயமும், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகின்றது. அவற்றை தவிர்க்க அரசு அனைத்து வசதிகளையும் கொண்டு கட்டப்பட்டுள்ள நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி நவீன மருத்துவமனையை திறந்து, உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
மேலும் திருச்செங்கோடு சாலையிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இம்மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருப்பதால் நோயாளிகள், உடன் வருபவர்கள் சென்று வர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் வசதி ஏற்பாடு செய்து, தொடங்கினால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் திருச்செங்கோடு சாலையில் செல்லும் டவுன் பஸ்களை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சென்று வரும்படி நடைமுறைபடுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.