சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி

அரசின் உரையை முழுமையாக படிக்காமல் கவர்னர் புறக்கணித்திருப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

Update: 2024-02-12 05:54 GMT

சென்னை,

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் வழக்கமாக சட்டசபை கூடும். ஆனால், இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் போன்ற காரணங்களால், சட்டசபை கூடுவது தள்ளிப்போனது. இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது.

காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதனை தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார். தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும். உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்க விரும்பவில்லை என்று கூறி 2 நிமிடங்களில் கவர்னர் உரையை நிறைவு செய்தார்.

இதையடுத்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். பின்னர், சட்டப்பேரவை மரபுகளை மீறி கவர்னரின் உரை அமைந்துள்ளது என்று கூறிய அவை முன்னவர் துரை முருகன், கவர்னர் உரையை வாசிக்கவில்லை என்றாலும் அந்த உரையை அப்படியே முழுவதுமாக பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அரசின் உரையை முழுமையாக படிக்காமல் கவர்னர் புறக்கணித்திருப்பது தமிழக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.


Tags:    

மேலும் செய்திகள்