விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2023-09-20 18:45 GMT

விபத்து வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஆவிப்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகன் நாகராஜன் (வயது 27), லாரி டிரைவர். இவர் கடந்த 21.1.2018 அன்று மதியம் 2.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் தனது நண்பர் ஜெயபாலுடன் வடமருதூரில் இருந்து புதூர் நோக்கிச்சென்றார். மோட்டார் சைக்கிளை நாகராஜன் ஓட்டினார்.

எல்ராம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே திருக்கோவிலூரில் இருந்து மடப்பட்டு நோக்கிச்சென்ற அரசு பஸ், திடீரென மோட்டார் சைக்கிளின் மீது மோதியதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த ஜெயபால் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நஷ்ட ஈடு கேட்டு மனுதாக்கல்

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு நாகராஜனின் தந்தை குப்புசாமி, விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு கடந்த 27.2.2020 அன்று விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த அப்போதைய நீதிபதி ராமகிருஷ்ணன், பாதிக்கப்பட்ட நாகராஜன் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் ரூ.22 லட்சத்து 92 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியோடு சேர்த்து வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.

ஆனால் நஷ்ட ஈட்டு தொகையை வழங்காததால், குப்புசாமி சார்பில் வக்கீல் கல்பட்டு ராஜா கடந்த 8.9.2021 அன்று நிறைவேற்று மனுதாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நாகராஜன் குடும்பத்திற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.28 லட்சத்து 62 ஆயிரத்து 888-ஐ அரசு போக்குவரத்துக்கழகம் வழங்க வேண்டுமெனவும், இந்த தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என உத்தரவிட்டது.

அரசு பஸ் ஜப்தி

இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடு தொகையை வழங்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து நேற்று விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட தயாராக இருந்த அரசு பஸ்சை நீதிமன்றம் உத்தரவின்படி முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் ராஜீவ்காந்தி, உதவியாளர் ஆறுமுகம் ஆகியோர் ஜப்தி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்