பிராட்வேயில் ரூ.1 கோடி ஹவாலா பணம் சிக்கியது - 2 பேர் கைது

சென்னை பிரோட்வேயில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.1 கோடி ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-01 07:41 GMT

சென்னை பிராட்வேயில் ஹவாலா பணம் கைமாறுவதாக பூக்கடை போலீசாருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தளவாய்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார் பிராட்வே பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படியாக வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். போலீசாரிடம் இருவரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களை சோதனை செய்தனர்.

பின்னர் அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டு கட்டாக ரூ.1 கோடியே 85 ஆயிரம் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. பணத்துடன் இருவரையும் பூக்கடை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், சென்னை மண்ணடியை சேர்ந்த அம்ஜத்கான்(வயது 26) மற்றும் செங்குன்றத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத்(50) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 85 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் அது ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன், கைதான 2 பேரையும் வருமான வரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்