பழனி அருகே கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

பழனி அருகே கொட்டித்தீர்த்த கனமழையால் பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதியடைந்தனர்.

Update: 2023-10-17 21:30 GMT

பழனி அருகே கொட்டித்தீர்த்த கனமழையால் பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் கிராம மக்கள் அவதியடைந்தனர்.

பரவலாக மழை

திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பழனி பகுதியில் உள்ள பிரதான அணையான வரதமாநதி அணை ஏற்கனவே நிரம்பி வழிகிறது. பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் பழனி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கனமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு சாரல் மழை இரவு வரை பெய்தது. இந்த மழையால் பழனி நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. முக்கிய சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.

தரைப்பாலம் சேதம்

இதேபோல் நெய்க்காரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை வெளுத்து வாங்கியது. நெய்க்காரப்பட்டியை அடுத்த புளியம்பட்டி, பெருமாள்புதூர், பெரியம்மாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் பெய்த பலத்த மழையால், அந்த கிராமங்களின் வழியாக செல்லும் பச்சையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பெருமாள்புதூர் கிராமத்தில் பச்சையாற்றின் குறுக்கே ஏற்கனவே இருந்த தரைப்பாலம் இடித்து அகற்றப்பட்டது. தற்போது அங்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாலத்தின் அருகில் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெருமாள்புதூரில் இருந்த தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது.

கிராம மக்கள் அவதி

மேலும் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் பெருமாள்புதூருக்கும், நாயக்கர் ேதாட்டம் பகுதிக்கும் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த சாலையில் செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதியடைந்தனர். பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பல்ேவறு தரப்பினரும் பெருமாள்புதூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் நெய்க்காரப்பட்டிக்கு சென்றனர்.

எனவே சேதமடைந்த தற்காலிக தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதேபோல் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்