தமிழகத்தில் கனமழை எதிரொலி: தேர்தல் கமிஷன் ஆலோசனை கூட்டம் தள்ளிவைப்பு

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சென்னையில் அரசியல் கட்சியினருடன் இன்று நடக்கவிருந்த ஆலோசனை கூட்டம் கனமழை காரணமாக தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-01-07 22:17 GMT

சென்னை,

இந்திய நாடாளுமன்ற பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி, நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நாடு முழுவதும் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதிகளில் தேர்தல் நடத்துவது என்பது குறித்து ஒவ்வொரு மாநிலங்களிலும் தேர்தல் கமிஷனர், கலெக்டர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்.

அந்தவகையில், தமிழ்நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் 9-ந்தேதி ஆகிய 2 நாட்கள் இந்திய தேர்தல் கமிஷனின் ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று சென்னை வருவதாக இருந்தது.

ஆலோசனை கூட்டம் தள்ளிவைப்பு

மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் இறுதி வாக்காளர் பட்டியல் குறித்தும் தேர்தல் பாதுகாப்பு உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் குறித்து, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருந்தனர்.

ஆனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் தேர்தல் கமிஷனரின் ஆலோசனை கூட்டத்தை வேறொரு தேதியில் நடத்துமாறு மாநில அரசு கேட்டு கொண்டது. அதனடிப்படையில் இந்திய தேர்தல் கமிஷன் ஆலோசனைக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்