திண்டிவனத்தில்வேன் கவிழ்ந்து விபத்து; 25 பெண் பக்தர்கள் காயம்

திண்டிவனத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 25 பெண் பக்தர்கள் காயமடைந்தனர்.

Update: 2022-12-27 18:45 GMT

திண்டிவனம், 

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட பெண்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தனர். தொடர்ந்து அவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு ஒரு வேனில் புறப்பட்டனர். வேனை செங்குன்றத்தை சேர்ந்த வெங்கடேஷ்(வயது 37) என்பவர் ஓட்டினார்.

மேல்மருவத்தூரில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு அவர்கள் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில், மயிலம் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அதே வேனில் புறப்பட்டனர்.

அந்த வேன், நேற்று மதியம் 3 மணி அளவில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் புறவழிச்சாலை கர்ணாவூர் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் பழுதாகி நின்ற லாரியை, கடக்க முயன்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

25 பக்தர்கள் காயம்

இந்த விபத்தில் செங்குன்றத்தை சேர்ந்த பூஜா(64), புஷ்பா(55), மங்கை(60), துளசி(50), செல்வி(30), இந்திரா(46), சுவேதா(20), நாகலட்சுமி(38), திவ்யா(14), விஜயலட்சுமி(10) உள்பட 25 பெண் பக்தர்கள் காயமடைந்தனர். மேலும் டிரைவா் வெங்கடேசும் காயமடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்