கடமலைக்குண்டு கிராமத்தில்சாலையோர பள்ளத்தால் தொடர் விபத்து:வாகன ஓட்டிகள் அவதி
கடமலைக்குண்டு கிராமத்தில் சாலையோர பள்ளத்தால் தொடர் விபத்து ஏற்படுகிறது.;
கடமலைக்குண்டு போலீஸ் நிலையம் எதிரே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக சாலையோரம் பள்ளம் ஏற்பட்டது. குடிநீர் குழாய் சரி செய்யப்பட்ட பிறகு சாலையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்படவில்லை. இதனால் நாளுக்கு நாள் சாலை சேதமடைந்து கொண்டே வந்தது. தற்போது சாலையின் ஒரு பகுதி முழுவதும் சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்துகள் நடைபெற்றுள்ளது. இதில் குழந்தைகள், பெண்கள் லேசான காயமடைந்தனர். மழைக்காலம் தொடங்குவதால் இந்த பகுதியில் சாலை மேலும் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.