பெரியகுளத்தில்நகராட்சி தலைவரை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு :தி.மு.க., கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

பெரியகுளத்தில், நகராட்சி தலைவரை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-24 18:45 GMT

நகராட்சி கூட்டம்

பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆணையர் புனிதன் முன்னிலை வகித்தார். கூட்டம் தொடங்கியதும் நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குழுத் தலைவர் சண்முகசுந்தரம் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக பேசத் தொடங்கினார்.

அப்போது தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவரை கண்டித்து சண்முகசுந்தரம் தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

வெளிநடப்பு

கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு 7 நாட்கள் தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நகராட்சி ஆணையர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தாரா? ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு அவர் பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டனர்.

அதற்கு ஆணையர் விளக்கம் அளித்தார். அதனை ஏற்றுக் கொள்ளாத தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஆணையர் மற்றும் அலுவலர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் தங்களது அலுவலக பணிக்கு சென்றனர்.

தி.மு.க. கவுன்சிலர்கள் போராட்டம்

இதையடுத்து கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆணையர் உடனே கூட்டத்திற்கு வரவேண்டும் இல்லையென்றால்அவர் மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் தி.மு.க., கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் அ.ம.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் ஆணையர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆணையர், அறையை விட்டு வெளியே வந்து கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தனது அறைக்கு அழைத்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்