குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்ட தொடக்க விழா

சிங்கம்புணரி அருகே குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்ட தொடக்க விழாவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டார்.

Update: 2022-05-24 17:14 GMT

சிங்கம்புணரி, 

சிங்கம்புணரி அருகே குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்ட தொடக்க விழாவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டார்.

ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம்

சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட மு.சூரக்குடி தொடக்கப்பள்ளியில் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடைபெற்றது. விழாவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-

6 வயதிற்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் நலன் கருதி ஊட்டசத்து உறுதி செய் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 21-ந்தேதி அன்று நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 22 ஆயிரத்து 283 குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் சிறப்பு மருத்துவ திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட பரிசோதனை

முகாமில் பிறந்த குழந்தை முதல் 6 வயதிற்குட்பட்ட கடுமையான எடைக்குறைவு, மிதமான எடை குறைவு மற்றும் வயதிற்கேற்ற உயரம் குறைபாடு உள்ள குழந்தைகளை ஆர்.பி.எஸ்.கே. திட்ட மருத்துவக்குழுக்களின் மூலம் உயரம் எடை, வளர்ச்சி குறைபாடு ஆகியவற்றை அளவீடுகள் செய்தும், பிறக்கும் போது வளர்ச்சி குறைபாடு, ஊட்டச்சத்து குறைவு, வியாதிகள் உள்ளிட்ட நோய்களுக்கான உடல் பரிசோதனைகளை மேற்கொண்டு அந்த குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய திட்டமிடுதல், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு அடுத்த கட்ட பரிசோதனைக்கு பரிந்துரைத்தல் ஆகிய பணிகளை அங்கன்வாடி மைய பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம்கணேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பரமேஸ்வரி, பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர் நபீஷாபானு, சிங்கம்புணரி தாசில்தார் கயல்செல்வி, டாக்டர்கள் ஷஜிதாபர்வீன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்