தொழில்-வணிக மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தொழில்-வணிக பயன்பாடு மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-09-24 18:46 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் வீடுகளுக்கான மின் கட்டணம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணமும் கிட்டத்தட்ட அதே அளவில் உயர்ந்தது. கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் மீண்டும் 2.18 சதவீதம் உயர்த்தப்பட்டது.

அதுமட்டுமின்றி, நிலையான கட்டணம், காலையிலும், மாலையிலும் 6 மணி முதல் 10 மணி வரை அதிக மின் பயன்பாட்டு நேரக் கட்டணம் என பல வழிகளில் மறைமுகமாகவும் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதைச் சமாளிக்க முடியாத சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செப்டம்பர் 25-ந் தேதி (இன்று) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன.

பேச்சுவார்த்தை

தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்க முடியாது. 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ள தமிழக அரசு, அந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதை உணர வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றும் நோக்குடன் அவற்றின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும். மின் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியுமோ, அந்த அளவுக்கு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்