மனைவியை அபகரித்து கொண்டதால் ஆத்திரம்: கொலையில் முடிந்த பகை - காங்கிரஸ் பிரமுகர் கைது

கொலையான ராஜாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Update: 2024-05-23 19:40 GMT

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜாஜி (வயது 45). இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி கட்சியின் மாநில தலைவரான இவர், நேற்று முன்தினம் மாலை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள டீ கடையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தார்.

அப்போது லுங்கி மற்றும் பனியன் அணிந்தபடி வந்த மர்மநபர் ராஜாஜியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவி்ட்டார். பூந்தமல்லி போலீசார் கொலையான ராஜாஜி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது, காட்டுப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் (34) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த கொலை தொடர்பாக பூந்தமல்லியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான கோபால் (55) மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சம்பத், சந்தோஷ், ராஜேஷ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கைதான காங்கிரஸ் பிரமுகர் கோபாலின் மனைவி கவுரி. இவர் கடந்த சில ஆண்டுகளாக கோபாலை விட்டு பிரிந்து கொலையான ராஜாஜியுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. அவர் கவுரியை தனது மனைவி எனக்கூறி சமூக வலைதளங்களில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் கவுரி இறந்து போனார்.

அதன்பிறகு தனது மனைவி கவுரி பெயரில் கல்வி அறக்கட்டளை தொடங்கி உள்ளதாக ராஜாஜி, பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போஸ்டர் ஒட்டியதுடன், சமூக வலைதளங்களிலும் வீடியோ வௌியிட்டு இருந்தார்.

இது கோபாலுக்கு ஆத்திரத்தையும், பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தியது. கோபால் சம்பாதித்த சொத்துகளில் பாதி கவுரியின் பெயரில் இருப்பதால் அந்த சொத்துகளை கேட்டும் கோபாலிடம் ராஜாஜி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

தனது மனைவியை அபகரித்து கொண்டதுடன், சொத்தையும் கேட்டதால் ராஜாஜி மீது கோபால் கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இதற்கிடையில் ராஜாஜியின் தம்பியான ஆட்டோ டிரைவர் கண்ணனுக்கும், கிருஷ்ணகுமாருக்கும் ஏற்கனவே மது அருந்துவதில் எற்பட்ட தகராறில் கல்லை தூக்கி போட்டதில் கண்ணனின் காலில் எலும்பு முறிந்தது. இதனால் ராஜாஜியும், அவரது தம்பியும் கிருஷ்ணகுமாரை பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்து வந்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த கோபால், எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல் கிருஷ்ணகுமாரை தொடர்பு கொண்டு, "உன்னை தீர்த்து கட்ட ராஜாஜி திட்டமிட்டு உள்ளார். அதற்குள் நீ முந்திக்கொள்" என்று தூண்டி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், டீ கடைக்குள் புகுந்து ராஜாஜியை வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான 6 பேரிடமும் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்