அம்பானி மகன் திருமணம்: விமான நிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து 'மோடி அரசின் மெகா மொய்' - சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

மதுரைக்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கும் கோரிக்கை பல ஆண்டு ஆகியும் இன்னும் நிறைவேறவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-02 07:53 GMT

சென்னை,

தொழில் அதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஜூலை மாதம் 12-ந்தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய விருந்து நிகழ்ச்சிகள் மார்ச் 1-ந்தேதி முதல் மார்ச் 3-ந்தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற்று வருகின்றன.

இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் பெரும்பாலானோருக்கு முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியினர் அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் உலக தொழில் அதிபர்கள் பில் கேட்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க், பாப் பாடகி ரிஹான்னா உள்ளிட்டோர் ஜாம்நகருக்கு வருகை தந்தனர்.

அவர்கள் விமானம் நேரடியாக ஜாம்நகருக்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய முகேஷ் அம்பானி முடிவு செய்தார். இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஜாம்நகர் விமான நிலையத்திற்கு 10 நாட்கள் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 25-ந்தேதி முதல் மார்ச் 5-ந்தேதி வரை இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் சுமார் 6 விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையத்தில், அம்பானி மகன் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அம்பானி மகன் திருமணத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்கள் சர்வதேச அந்தஸ்து வழங்கி மோடி அரசு மெகா மொய் வழங்கியுள்ளதாக மதுரை சட்டமன்ற தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"மோடி அரசின் மெகா "மொய்"

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்கள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து.

6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு.

ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை. தமிழ்நாட்டுக்கு எதற்கு 4 வது சர்வதேச விமான நிலையம் என்று கேள்வி கேட்டவர்கள்தான் இவர்கள்."

இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்