சர்வதேச மகளிர் தினம்: பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

ஒருவரின் வளர்ச்சிக்கு எப்போதும் துணையாக நிற்கும் பெண்களைப் போற்றுவதற்காகவே உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்று பிரேமலதா கூறியுள்ளார்.

Update: 2024-03-07 16:12 GMT

கோப்புப்படம் 

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:-

ஒவ்வொரு நாளும் எத்தனையோ சாதனைகளை படைத்து வரும் பெண்களுக்கு மென்மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் உலக மகளிர் தின நாள் கொண்டாட்டங்கள் அமைவதோடு, பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு, வாழ்வில் சோதனைகளை வாய்ப்பாகக் கருதி உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். ஆணும், பெண்ணும் நட்புணர்வோடு, நல்ல புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிய வழி.

தோழியாக, தாயாக, சகோதரியாக, தாரமாக என நம் அனைவரின் வாழ்விலும் ஓர் அங்கமாக இருந்து கொண்டு, தங்கள் வாழ்க்கையையே பெண்கள் அர்ப்பணித்துக் கொண்டு வருகிறார்கள். அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், ஊடகம், திரைத்துறை, அறிவியல் என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் இன்று சாதனைகளைப் படைத்து வருகின்றனர். உலகத்தில் உள்ள அனவருக்கும் தாய் தான் அவர்களின் வளர்ச்சிக்கும், அவர்களின் முன்னேற்றத்திற்கும் முதல் படியாக இருப்பார்கள். அப்படியான தாய்மார்களை, ஒருவரின் வளர்ச்சிக்கு எப்போதும் துணையாக நிற்கும் பெண்களைப் போற்றுவதற்காகவே இந்த உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

தே.மு.தி.க. சார்பில் பெண்களுக்குக் கேப்டன் நிறைய தொண்டுகளை செய்திருக்கிறார். பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தரும் வகையில், சிறு கடைகள் வைத்துத் தருவது, தையற்பயிற்சியை ஊக்குவிக்கத் தையல் இயந்திரங்களை இலவசமாக வழங்குவது, ஊனமுற்றவர்களுக்கு ஏற்ற உபகரணங்களை வழங்குவது, கல்வி உதவி ஏற்படுத்தித் தருவது, கணினி பயிற்சி மையங்களை ஏற்படுத்தித் தருவது போன்றவைகளோடு, பெண்களுக்கான திருமண உதவிகளைச் செய்து தருவது, மருத்துவ உதவிகள் போன்றவைகளையும் கேப்டன் செய்துக் கொடுத்திருக்கிறார்.

இந்திய அரசியலிலேயே மகளிருக்கு அரசியலில் சமபங்கு அளித்துள்ள ஒரே இயக்கம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மட்டுமே. தே.மு.தி.க.வில் மகளிர் அணிக்கென்று தனிச் சீருடையை உருவாக்கி, ஆண்களுக்கு நிகராகப் பெண்களையும் அரசியலில் மதிக்க வேண்டும் என்பதை மற்றக் கட்சிகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் கேப்டன் செய்த மாற்றங்கள் தான், இன்றைக்கு பல்வேறு கட்சிகளில் மகளிருக்கு சம உரிமைகள் வழங்கப்பட காரணமாக இருந்து வருகிறது. பெண்களை என்றைக்குமே தேசிய முற்போக்கு திராவிட கழகம் போற்றி, கெளரவித்துக் கொண்டே தான் இருக்கிறது. கேப்டன் வழியில், அவருடைய அனைத்து விதமான உதவிகளையும், நலத்திட்டங்களையும் நாம் தொடர்ந்து வழங்கி, பெண்களைப் போற்றி கௌரவிப்போம்.

இந்த நன்னாளில், கேப்டன் மீது அன்பு கொண்ட, தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களும், எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழத் தே.மு.தி.க. சார்பில் எனது இதயம் கனிந்த உலக மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்