ஏரியில் மணல் கடத்தல் குறித்து புகார் அளித்தவருக்கு மிரட்டலா?- கலெக்டர் அறிக்கை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஏரியில் மணல் கடத்தல் குறித்து புகார் அளித்தவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதா என கலெக்டர் அறிக்கை அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-10-09 21:07 GMT


திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நித்யானந்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "திருச்சி மாவட்டம் முசிறி அருகே சித்திலாரை ஏரியில் இருந்து இரவு நேரங்களில் எந்திரங்கள் மூலம் தாது மணல் மற்றும் செம்மண் ஆகியவற்றை 200-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகளில் கடத்துகின்றனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டவர்கள் மீது தாது மணல் மற்றும் செம்மண் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக கடத்தி, ஒப்பந்ததாரர்களிடம் முறைகேடாக விற்பனை செய்வதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, எனது வீட்டை சில தினங்களுக்கு முன்பு சேதப்படுத்தினர். மேலும், புகார் கொடுத்த என்னையும் எனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததோடு, தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசுக்கு சொந்தமான ஏரியில் இருந்து சட்டவிரோதமாக தாதுமணல், செம்மண் ஆகியவற்றை டிப்பர் லாரிகளில் கடத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம் மற்றும் லட்சுமிநாராயணன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் புகார் மீது எடுத்த நடவடிக்கை குறித்து திருச்சி கலெக்டர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர், முசிறி தாசில்தார் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்