அயர்லாந்து நாட்டு பெண் மர்மச்சாவு போலீசுக்கு தெரியாமல் பிணம் புதைப்பு

சாத்தனூர் அருகே பண்ணை வீட்டில் வசித்து வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2023-07-26 17:40 IST

தண்டராம்பட்டு

சாத்தனூர் அருகே பண்ணை வீட்டில் வசித்து வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அயர்லாந்து பெண்

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அருகில் உள்ள நெடுங்காவாடி கிராமத்தில் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒருவர் 5 ஆண்டுக்கு முன்பு நிலம் வாங்கி அதில் பண்ணை வீடு அமைத்து வசித்து வந்தார். பின்னர் அவர் ரஷ்யா சென்று விட்டார்.

அப்போது அவர் திருவண்ணாமலையில் வசித்து வந்த அயர்லாந்து நாட்டை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு விட்டு சென்றார்.

மர்மச்சாவு

அந்த பெண் பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதனால் தனது பாதுகாப்புக்காக 3 நாய்களையும் வளர்த்து வந்தார். திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்பவர் ஞாயிற்றுக்கிழமை தோறும் இவருக்கு தேவையான பழம்-காய்கறிகளை வாங்கி வந்து கொடுத்துவிட்டு நலம் விசாரித்து செல்வது வழக்கம்.

பார்ப்பதற்கு மங்களகரமாக இருந்த இந்த அயர்லாந்து பெண்ணை அந்த கிராம மக்கள் மீனாட்சி அம்மாள் என்று அழைத்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போல மீனாட்சி அம்மாளை பார்ப்பதற்கு ஹரி நெடுங்காவாடி பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது மீனாட்சி அம்மாள் இறந்து அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

போலீசுக்கு தெரியாமல் புதைப்பு

அதை தொடர்ந்து கிராம மக்களும், திருவண்ணாமலை ஹரியும் இணைந்து இறுதிச்சடங்குகள் செய்து பண்ணை வீட்டிலேயே போலீசுக்கு தெரியாமல் புதைத்து விட்டனர்.

நேற்று மீனாட்சி அம்மாளுக்கு இறப்பு சான்று பெறுவதற்காக ஹரி, கிராம நிர்வாக அலுவலர் சாலம்மாள் என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் இறந்த பெண்மணி அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதால் அது குறித்து வருவாய்த்துறை, காவல்துறைக்கு புகார் தெரிவித்தார்.

உண்மையான பெயர் என்ன?

அதையடுத்து தண்டராம்பட்டு தாசில்தார் அப்துல் ரகூப், செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி வெற்றிவேல், மண்டல துணை தாசில்தார் மோகன்ராமன், வருவாய் அலுவலர் சத்ய நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அயர்லாந்து பெண் புதைக்கப்பட்ட இடத்தையும் அவர்கள் பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து இறந்த அயர்லாந்து பெண்ணிடம் தொடர்பில் இருந்த ஹரி உள்ளிட்ட நபர்களிடமும் அவரை புதைத்த கிராம முக்கிய பிரமுகர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அயர்லாந்து நாட்டு பெண்ணை கிராம மக்கள் மீனாட்சி அம்மாள் என்று அழைத்தாலும் அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியவில்லை.

உடலை தோண்டி எடுக்கமுடிவு

மேலும் இறந்த மீனாட்சி அம்மாளின் இறப்பு குறித்து அயர்லாந்தில் உள்ள அவரது சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வந்த பின்பு அவரிடம் புகார் பெற்று பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்படும். அதன்பின்னரே இயற்கையாக மீனாட்சி அம்மாள் மரணம் அடைந்தாரா? அல்லது பணத்திற்காக யாராவது அவரை கொலை செய்தார்களா? என்பது குறித்து உண்மை தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ணை வீட்டிலிருந்த 3 நாய்களும் மீட்கப்பட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள காப்பகத்தில் விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்