ஐ.டி. பெண் ஊழியரிடம் ரூ.19¾ லட்சம் மோசடி
ஆன்லைன் முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாக கூறி பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.19¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது.;
ஆன்லைன் முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாக கூறி பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.19¾ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
ஐ.டி. ஊழியர்
கோவை தண்ணீர்பந்தல் ரோட்டை சேர்ந்தவர் யாருல் பிரதி (வயது 34). ஐ.டி. ஊழியர். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த ஜனவரி மாதம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் நீங்கள் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், கமிஷன் கிடைக் கும். மேலும் யூடியூபில் லைக், ஷேர் செய்தால் வருமானம் கிடைக்கும் என்ற தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பிய யாருல்பிரதி, அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய மர்ம நபர் கூறியபடி ஆன்லைனில் முதலீடு செய்தார். ஆரம்பத்தில் குறைந்த தொகையை முதலீடு செய்தார். அந்த தொகைக்கு குறிப்பிட்ட அளவு லாபம் அவருக்கு கிடைத்தது.
பண மோசடி
இந்த நிலையில் போனில் பேசிய மர்ம நபர் கூடுதல் தொகை செலுத்தினால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்.
இதையடுத்து யாருல் பிரதி ரூ.19 லட்சத்து 79 ஆயிரத் தை அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் ஆன்லைன் மூலம் முதலீடு செய்தார். அதன்பிறகு அந்த நபரிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த யாருல்பிரதி கொடுத்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
வங்கி கணக்குகள் முடக்கம்
ஐ.டி. பெண் ஊழியர் யாருல்பிரதி ரூ.19 லட்சத்து 19 ஆயிரத்தை மர்ம நபர் கூறிய 5 வங்கி கணக்குகளில் செலுத்தி உள்ளார். அந்த 5 வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதனால் அந்த வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க முடியாது. அந்த பணத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.