பெரியார் சிலை குறித்து சர்ச்சை பேச்சு; புதுச்சேரியில் கனல் கண்ணன் அதிரடி கைது

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சினிமா சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை போலீசார் இன்று கைது செய்தனர்.

Update: 2022-08-15 06:12 GMT

சென்னை,

இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் கடந்த1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளர் கனல் கண்ணன் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதரின் கோவிலில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர் சாமிதரிசனம் செய்கின்றனர். ஆனால், கோவிலுக்கு எதிரே கடவுளே இல்லை என்று கூறியவரின் சிலை (பெரியார் சிலை) என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்' என்று கூறினார்.

இதனிடையே, பெரியார் சிலை உடைப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக கனல் கண்ணன் மீது தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை கடந்த 11-ம் தேதி விசாரித்த கோர்ட்டு, கனல் கண்ணனுக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனை தொடர்ந்து கனல் கண்ணன் தலைமறைவானார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் புதுச்சேரியில் இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கனல் கண்ணன் சென்னைக்கு அழைத்துவரப்பட உள்ளார். அவரை நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்