தூத்துக்குடி சைக்கிளிங் வீராங்கனைக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிள் வழங்கிய கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சைக்கிளிங் வீராங்கனை சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கு வசதியாக ரூ.14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

Update: 2022-07-06 10:32 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. தனது 13 வயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவரான இவர் மாவட்ட, மண்டல அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை வென்று உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான சைக்கிள் வாங்குவதற்கு அவரிடம் போதுமான வசதியில்லாத காரணத்தால் அந்த போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழியிடம், தனக்கு சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி, புதிய சைக்கிள் ஒன்றை வழங்கினார்.

இந்த சைக்கிளின் மூலமாக வீராங்கனை ஸ்ரீமதி, ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொண்டு குழு போட்டியில் தங்கப் பதக்கத்தையும், தனித்துப் போட்டியிட்டதில் வெள்ளிப் பதக்கத்தையும், கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த ஆசிய அளவிலான டிராக் சைக்கிளிங் குழு போட்டியில் கலந்துகொண்டு 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

இந்த நிலையில் இஸ்ரேலில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) நடைபெற உள்ள உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கான பிரத்யேக சைக்கிளை தனக்கு வழங்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி.க்கு கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, ரூ.14 லட்சம் மதிப்பிலான நவீன சைக்கிள், ஹெல்மெட், ஷூ ஆகியவற்றை தூத்துக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து கனிமொழி எம்.பி. வீராங்கனை ஸ்ரீமதியிடம் வழங்கினார்.

தொடர்ந்து மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் இந்த சைக்கிளை பயன்படுத்தும் முதல் பெண் வீராங்கனை ஸ்ரீமதி என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்