காதலனுடன் சுற்றியதை மறைக்க கல்லூரி மாணவி நடத்திய கடத்தல் நாடகம்; போலீஸ் விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது

சென்னையில் காதலனுடன் சுற்றி திரிந்த கல்லூரி மாணவி ஒருவர் அதை பெற்றோரிடம் மறைப்பதற்காக கடத்தல் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.

Update: 2023-10-02 05:04 GMT

கல்லூரி மாணவியின் காதல்

பிரச்சினைக்குரிய அந்த மாணவி, சென்னை தேனாம்பேட்டை பகுதியில் வசிக்கிறார். கோடம்பாக்கம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கல்லூரி செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் வழக்கத்தைவிட மிகவும் காலதாமதமாக வீட்டுக்கு வந்தார். இதனால் பெற்றோர் பதறிபோய் விசாரித்தார்கள். பெற்றோரை சமாளிக்க மாணவி திடீரென்று அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். தான் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்றதாகவும், வழியில் ஆட்டோவை மறித்து 2 மர்ம நபர்கள் ஏறியதாகவும், அந்த நபர்கள் மயக்க மருந்தை தனது முகத்தில் தெளித்து ஆட்டோவில் தன்னை கடத்தியதாகவும், பின்னர் சென்னை புறநகர் பகுதியில் தன்னை இறக்கி விட்டதாகவும் கூறினார்.

போலீசில் புகார்

இடையில் என்ன நடந்தது? என்பது தெரியவில்லை என்றும் மழுப்பலாக கூறினார். இதைக்கேட்ட அவரது பெற்றோர் மாணவியை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். போலீசாரிடம் மாணவி கூறிய கடத்தல் சம்பவத்தை சொல்லி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்கள். கோடம்பாக்கம் பகுதியில் இருந்து மாணவி கடத்தப்பட்டதாக கூறியதால் கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளிக்கும்படி தேனாம்பேட்டை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக மாணவியின் பெற்றோர், கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்கள். நடந்த சம்பவத்தை பற்றி சொல்லி புகார் கொடுத்தார்கள். உயர் அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது. கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். தியாகராயநகர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

கடத்தல் நாடகம்

பெண் சப்-இன்ஸ்பெக்டர் குறிப்பிட்ட மாணவியிடம் தனியாக விசாரணை நடத்தினார். விசாரணையில் மாணவி அளித்த பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. அதன்பிறகு பெற்றோரை வெளியே நிற்க சொல்லிவிட்டு மாணவியிடம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தனியாக விசாரித்தார். அப்போது மாணவி கூறிய தகவல் தவறானது என்றும், கல்லூரிக்கு போகாமல் காதலனுடன் சுற்றியதை மறைப்பதற்காக மாணவி பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடியதும் அம்பலமானது.

பெற்றோரிடம் இந்த உண்மை தகவலை சொல்லி குறிப்பிட்ட மாணவியையும் போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள். இந்த சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்