கிணத்துக்கடவு, போத்தனூரில் நின்று செல்ல வேண்டும்

மேட்டுப்பாளையம்- நெல்லை இடையே இயக்கப்படும் கோடை கால சிறப்பு ரெயில் கிணத்துக்கடவு, போத்தனூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-05-22 16:24 GMT

பொள்ளாச்சி

மேட்டுப்பாளையம்- நெல்லை இடையே இயக்கப்படும் கோடை கால சிறப்பு ரெயில் கிணத்துக்கடவு, போத்தனூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

எக்ஸ்பிரஸ் ரெயில்

மேட்டுப்பாளையத்தில் இருந்து நெல்லைக்கு வாராந்திர கோடை கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.45 மணிக்கு நெல்லை செல்கிறது. மறுமார்க்கத்தில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மேட்டுப்பாளையத்திற்கு காலை 7.30 மணிக்கு செல்கிறது. இந்த ரெயிலை தென்மாவட்ட மக்கள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகள், ஆன்மிக தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் கிணத்துக்கடவு, போத்தனூரில் ரெயில் நிறுத்தம் இல்லாததால் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கூடுதல் வருவாய்

மேட்டுப்பாளையம்-நெல்லை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலை முன்பதிவு செய்தும், முன்பதிவு இல்லாமல் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். கோடை விடுமுறையை ஒட்டி இந்த ரெயிலை நெல்லையப்பர் கோவில், காசிவிஸ்வநாதர், மீனாட்சியம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், வனபத்ரகாளியம்மன், மாசாணியம்மன், பழனி ஆகிய கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் குற்றாலம், ஊட்டி, வால்பாறை, டாப்சிலிப் போன்ற சுற்றுலா தலங்களுக்கும் எளிதில் செல்ல முடிகிறது. இதற்கிடையில் பொள்ளாச்சி-கோவை வழித்தடத்தில் உள்ள கிணத்துக்கடவு, போத்தனூர் ரெயில் நிலையங்களில் ரெயில் நிற்பதில்லை.

இதனால் கிணத்துக்கடவு, போத்தனூர் பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் பொள்ளாச்சி அல்லது கோவைக்கு சென்று ரெயிலில் ஏற வேண்டி உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு 21 கிலோ மீட்டரும், கோவையில் இருந்து 26 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. போத்தனூரில் தொழில்நுட்ப நிறுத்தம் மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் நெல்லையில் இருந்து வருபவர்கள் இறங்கி கொள்ளலாம். வணிக நிறுத்தம் கொடுக்காததால் அங்கிருந்து ரெயில் ஏற முடியாது. கிணத்துக்கடவு, போத்தனூரில் ரெயில் நின்று சென்றால், மேலும் பலர் ரெயில் சேவையை பயன்படுத்த முடியும். இதன் மூலம் ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்