கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெப்ப நிலை அதிகமாக பதிவாகியது

122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெப்ப நிலை அதிகமாக பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.

Update: 2023-03-03 18:45 GMT

கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் காலநிலை மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் குறித்து 2 நாட்கள் கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடல் நீர் மட்டம்

பருவ நிலை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் மட்டம் கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. ஆனால் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக உயராது.

கடலூரில் ஒரு மாதிரியாகவும், சென்னையில் ஒரு மாதிரியாகவும், விசாகப்பட்டினத்தில் ஒரு மாதிரியாகவும் உயர்ந்து வருகிறது. ஆனால் அவை சென்டிமீட்டர் மற்றும் மில்லி மீட்டர் அளவிலேயே உயர்ந்து வருகிறது.

கால நிலை மாற்றத்தை பார்க்கும் போது, 30 ஆண்டுகளை சேர்த்து பார்க்க வேண்டும். ஒரு வருடத்தை பார்க்கும் போது, ஒரு மில்லி மீட்டர் தானே என்று பார்ப்போம். கடல் பெரியது. கடலின் வெப்ப நிலை, நிலத்தின் வெப்ப நிலை, பனி உருகுதல், துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகும் நிகழ்வுகள் நடந்து கொண்டே வருகிறது.

வெப்ப நிலை அதிகம்

வெப்பநிலையும் அதிகரித்து வருகிறது. அதாவது 40 டிகிரி வெப்பம் ஒரு மாதத்தில் 10 நாட்கள் இருந்தால், இப்போது 15 நாட்கள் இருக்கிறது. அகில இந்திய அளவில் 122 ஆண்டுகளில் வெப்ப நிலை அதிகம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களை நாம் குளிர்காலங்களாக கருதுவோம். குளிர்காலத்துடைய இந்த ஆண்டு வெப்ப நிலை என்பது கடந்த 122 ஆண்டுகளை விட அதிகம். ஆனால் இது மொத்த இந்தியாவுக்கானது.

தமிழகத்தில் சென்னையில் ஒரு சில நாட்களில் தான் இயல்பை விட அதிக வெயில் பதிவாகி இருந்தது.

மார்ச் முதல் மே மாதம் வரை கோடை காலம். இந்த காலத்தில் அதிகபட்ச வெப்ப நிலை, குறிப்பாக கடலோர மாவட்டங்களில் இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும். உள் மாவட்டங்களில் இயல்பான அளவில் வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளது.

அறிவியலும் வளர வேண்டும்

இந்த வெயிலை சமாளிக்க காற்றோட்டமான பகுதியில் இருக்க வேண்டும். தண்ணீர், பழச்சாறு குடிக்க வேண்டும். பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.

பருவ மழை மற்றும் புயல் உருவாகுவதை கணிப்பதற்கான கருவிகள், தரவுகள் நம்மிடம் போதுமான அளவில் உள்ளது. வானிலையை பொறுத்தவரை தரவுகள் மட்டும் போதாது, அதற்கு ஏற்றவாறு அறிவியலும் வளர வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில் நாம் எதிர்பார்க்காதது நடந்து விடும். நடக்காமலும் இருக்கும். இப்போது செயற்கை நுண்ணறிவு உள்ளது. இன்னும் துல்லியத்தன்மை கிடைக்கும்.

கடலூர் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கக்கூடிய மாவட்டமாக உள்ளது. இது கால நிலை மாற்றத்தால் ஏற்படுவதாகும். தற்போது பகலில் வெயிலும், இரவில் பனியும் அதிகமாக இருக்கிறது. இது காலநிலை மாற்றம். ஒரே நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலைக்கும், குறைந்த பட்ச வெப்ப நிலைக்கும் வேறுபாடு அதிகமாக இருக்கிறது. இது இயல்பு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்