பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம்

பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம் கட்டுரை குறித்து மனிதநேயர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.;

Update:2023-03-06 00:15 IST

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகுதியாகவே இருந்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் வருடா வருடம் கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இந்த ஆண்டும் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. மனிதர்களாலே இந்த வெயிலை தாங்க முடியவில்லை என்றால், சின்னஞ்சிறு பறவைகள் என்ன செய்யும்?

உணவு இல்லாமல்கூட கொஞ்சம் வாழலாம். நீரின்றி வாழ முடியாதே. எனவே நம்மையும், நம் பிள்ளைகளையும் காப்பதுபோல், நம்மைச்சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளையும் காப்பாற்றுவோம். அவைகளின் தாகம் தீர்க்க வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைப்போம். தானியங்களைத் தூவுவோம். உணவுகளும் இடுவோம். மனிதநேயத்துடன் அதை இப்போதே தொடங்குவோம்.

இதுகுறித்து மனிதநேய ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம்.

அழிந்து வரும் பறவைகள்

நாமக்கல்லை சேர்ந்த சமூக ஆர்வலர் தில்லை சிவக்குமார் கூறியதாவது:-

உலகின் பெரும்பாலான பகுதிகளில் பறவைகள் பல இனங்களாக காணப்படுகின்றன. நாம் பறவைகளோடு ஒரு காலத்தில் வாழ்க்கை வாழ்ந்து வந்தோம். தற்போது அவைகளின் இருந்து மிகவும் விலகி இருக்கிறோம். பறவைகளும் ஒரு உயிர் தான். அவைகளும் வாழ உணவு வேண்டும், குடிக்க நீர் வேண்டும்.

குறிப்பாக சிட்டுக்குருவி இனமே தற்போது அழிந்துவிட்டது என்கிறார்கள். விவசாய நிலங்கள் குறைந்து விட்டன. வேளாண்மை தொழிலுக்கு குருவிகள் பேருதவி புரிந்து வந்தவை. சுற்றுச்சூழல் மாற்றங்களால் உலகம் முழுவதும் மரங்களும், பறவைகளும் அழிந்தும், குறைந்தும் வருகின்றன. தற்போது பெரும்பாலான நகர்ப்புறங்களில் பறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் பறவைகளையாவது காப்பாற்ற வேண்டும். அவைகளுக்கு பொதுமக்கள் தங்கள் வீட்டு மாடியில் காலையும், மாலையும் குடிக்க தண்ணீரும், தானியங்களும் வைக்க வேண்டும்.

தானியங்கள், தண்ணீர் வைக்கலாம்

திருச்செங்கோட்டை சேர்ந்த பாஷா:-

வாய் பேச முடியாத உயிரினங்களிடமும் நாம் மனிதநேயத்தை வெளிப்படுத்த வேண்டும். அதாவது ஒவ்வொரு கோடைக்காலத்திலும் நமது வீட்டு வாசற்படி அருகிலோ அல்லது மொட்டை மாடியிலோ பறவைகளுக்கு உணவு தானியங்கள், தண்ணீரை வைக்கலாம். இதனை கோடை காலத்தில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அன்றாட வாழ்வில் தினமும் ஒரு பழக்கமாக கூட இதை செய்யலாம்.

கத்தரி வெயில் இப்போதே வந்துவிட்டது போல, வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள நாம் எவ்வளவோ முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். ஆனால் வாய் இல்லா ஜீவன்களுக்கு நாம் செய்யும் பேருதவியாக எண்ணி செயல்பட வேண்டும்.

மீண்டும் உயிர்வந்தது போல..

பரமத்திவேலூரை சேர்ந்த நிலபுரோக்கர் சேகர்:-

நான் தொழில் ரீதியாக வெயிலில் அலைவது உண்டு. கோடைகாலத்தில் எளிதில் நாக்கு வறண்டு போய்விடும். எனவே தண்ணீரையோ அல்லது குளிர்ச்சியான பானங்களையோ பருகினால் தான் மீண்டும் உயிர் வந்தது போல இருக்கும். இதேபோல் செல்ல பிராணிகளும், கால்நடைகளும், பறவை இனங்களும் தண்ணீருக்காக பரிதவிக்கின்றன.

எனவே நாம் பறவைகள், செல்லப்பிராணிகள், கால்நடைகளின் தாகத்தை தணிக்க வீட்டுக்கு வெளியே குவளைகள் அல்லது பக்கெட்டுகளில் தண்ணீர் வைப்பதை இந்த கோடைக்காலத்தில் பின்பற்ற வேண்டும்.

தண்ணீர் பந்தல்கள்

கந்தம்பாளையத்தை சேர்ந்த கோபாலன்:-

கோடை காலத்தில் பொதுமக்களின் தண்ணீர் தாகத்தை தணிப்பதற்கு அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் தண்ணீர் பந்தல்கள் அமைக்கின்றன. ஆனால் பறவைகளின் தாகத்தை தீர்க்க முன்பெல்லாம் மொட்டை மாடிகள், பால்கனிகளில் கிண்ணம், பிளாஸ்டிக் டப்பாக்களில் பறவைகளுக்காக தண்ணீர் வைப்பது வழக்கம். தற்போது இந்த பழக்கம் குறைந்து வருகிறது. எனவே அனைவரும் இந்த பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

வாயில்லாத ஜீவராசிகளுக்கு நாம் செய்யும் இந்த உதவி நமக்கு புண்ணியமாக சேரும். இதேபோல் பறவைகளுக்கு தண்ணீருடன் தீனியும் வைக்கலாம். இதனால் நமக்கு பெரியளவில் செலவு ஏற்படாது. வீட்டில் உள்ள தானியங்களில் சிறிதளவு போட்டாலே போதும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இன்றே தொடங்கலாமே...

பல வீடுகளில் பறவைகளை தங்களது உறவுகளாகவே வளர்த்து வரும் வேளையில், பறவைகளின் தாகம் தீர்க்க நாம் எடுக்கும் நல்ல நடவடிக்கைகளை நமது கடமையாகவும் பார்க்க வேண்டும். வாயில்லாத ஜீவன்களின் பசியை, தாகத்தை தீர்க்க இன்றே நல்ல நடவடிக்கையில் இறங்கலாமே!

Tags:    

மேலும் செய்திகள்