லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: என்ஜினீயரிங் மாணவர் சாவு

லாரி-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் இறந்தார்.

Update: 2023-07-02 21:08 GMT

புஞ்சைபுளியம்பட்டி

லாரி-மோட்டார்சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் இறந்தார்.

கல்லூரி மாணவர்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சொலவனூர் வி.கே.சி நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகன் சுபாஷ் (வயது 17). இவர் டி.என்.பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் இறந்துவிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பவானிசாகரில் இருந்து சொலவனூர் வி.கே.சி. நகருக்கு சுபாஷ் சென்று கொண்டு இருந்தார். புஞ்சைபுளியம்பட்டி அருகே வந்தபோது எதிரே சிமெண்டு கலவை எந்திரத்தை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அப்போது கண்இமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

சாவு

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட சுபாஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்ததும் லாரி நிற்காமல் அங்கு இருந்து சென்றுவிட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் சுபாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி டிரைவரையும் தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

விபத்தில் என்ஜனீயரிங் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்