2-ம் திருமணம் செய்வதாக நம்ப வைத்து தொழில் அதிபரிடம் ரூ.50 லட்சம்-நகை மோசடி செய்த மதுரை இளம்பெண் நண்பருடன் கைது

2-வதாக திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் நகை மோசடி செய்த மதுரை இளம்பெண்ைணயும், அவருடைய ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-11 22:45 GMT

இதுதொடர்பாக போலீசார் தரப்பில் கூறியதாவது:-

2-வது திருமணம்

சென்னை முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராம் பாலாஜி (வயது 42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையில் உள்ள தனது நண்பர் இல்ல திருமணத்திற்கு வந்த இடத்தில், அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த வித்யாஸ்ரீ (31) என்ற பெண்ணின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. இதையடுத்து இருவரும் செல்போனில், அடிக்கடி பேசி வந்தனர்.

அப்போது தானும் கணவருடன் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருவதாக ராம் பாலாஜியிடம், வித்யாஸ்ரீ தெரிவித்துள்ளார். மேலும், நாம் இருவரும் 2-வது திருமணம் செய்துகொள்ளலாம் என்று வித்யாஸ்ரீ, ராம்பாலாஜியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நகை, பணம் மோசடி

இதற்கிடையே மதுரைக்கு வந்து ராம் பாலாஜியை அழைத்து பேசி பழகி வந்த வித்யாஸ்ரீ, அவ்வப்போது பணம் கேட்டு வாங்கினாராம். இதன்மூலம் வித்யாஸ்ரீ, ரூ.50 லட்சம் வரை பணம் மற்றும் நகைகள் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் வித்யாஸ்ரீ திருமணம் குறித்து பேசாமல், செல்போனை சுவிச்ஆப் செய்துவிட்டார். வசித்து வந்த வாடகை வீட்டையும் காலி செய்து தலைமறைவானதாக தெரிகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த ராம் பாலாஜி இது தொடர்பாக விசாரித்துள்ளார். அப்போதுதான், இந்த மோசடி குறித்து அறிந்துள்ளார். வித்யாஸ்ரீக்கு வேறு நபருடன் பழக்கம் இருந்ததும் தெரியவந்தது.

இளம்பெண் கைது

இதுகுறித்து ராம் பாலாஜி அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தன்னை 2-வது திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து மோசடி செய்த வித்யாஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் வித்யாஸ்ரீ, இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர் அஜித்குமார் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்