அறையை விட்டு வெளியேற்றிய வாலிபர் அடித்துக்கொலை-பரோட்டா மாஸ்டர் கைது

ஒன்றாக தங்கி இருந்த அறையில் இருந்து தன்னை வெளியேற்றிய வாலிபரை ஆத்திரத்தில் பரோட்டா மாஸ்டர் கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2024-05-26 04:00 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் வசந்தநகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் ரவிக்குமார் (வயது 34). இவர் வண்டிக்காரத்தெரு பகுதியில் உள்ள அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு பரணி என்ற மனைவியும் ஆகாஷ் (6) என்ற மகனும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகனை அழைத்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு பரணி சென்றுவிட்டாராம். இதனால் ரவிக்குமார் அறை எடுத்து வசித்து வந்துள்ளார்.

ரவிக்குமாரின் அக்காள் கணவரின் தம்பியான ஆர்.எஸ்.மங்கலம் அருகே செட்டியகோட்டை பகுதியை சேர்ந்த கணேசன் (42) என்பவர், ரவிக்குமாரின் அறையில் ஒன்றாக தங்கியுள்ளார். கணேசன் ராமநாதபுரத்தில் உள்ள ஓட்டல்களில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ரவிக்குமாரும் கணேசனும் ஒன்றாக அறையில் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார், கணேசனிடம் இனி என்னுடன் அறையில் தங்கக்கூடாது என்று, அவரை அறையில் வெளியே அனுப்பி கணேசனின் துணிகளை எடுத்து வீசி உள்ளார்.துணிகளை எடுத்துக்கொண்டு, அருகில் உள்ள அரசமரத்தின் அடியில் கணேசன் படுத்து தூங்கினாராம்.

அப்போதும் ஆத்திரம் தீராத ரவிக்குமார், அரச மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த கணேசனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டாராம். அருகில் கிடந்த செங்கலை எடுத்து கணேசனை தாக்கியதாகவும் தெரிகிறது..அறையில் இருந்து வெளியே அனுப்பியதோடு தொடர்ந்து வந்து தாக்குவதால் ஆத்திரமடைந்த கணேசன், அருகில் கிடந்த பெரிய மூங்கில் கம்பை எடுத்து ரவிக்குமாரின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ரவிக்குமார் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கணேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து ரவிக்குமாரின் அக்காள் ரேவதி, அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.கணேசனுக்கு விஜி என்ற மனைவியும் அனுஷ்கா (14) என்ற மகளும், கவின் (13) என்ற மகனும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்