மான் இறைச்சியை விற்க முயன்றவர் கைது

குடியாத்தம் அருபகே புள்ளிமான் இறைச்சியை விற்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-25 13:43 GMT

 குடியாத்தம் அருகே கல்லப்பாடி காப்புக்காடுகள் பகுதியில் ஒருவர் மான்கறியை துண்டுகளாக்கி விற்பனை செய்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து உதவி வன பாதுகாவலர் முரளிதரன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் கல்லப்பாடி பகுதியில் திடீர் சோதனை செய்து ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் கல்லப்பாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் (வயது 38) என்பது தெரிய வந்தது. இவர் ராமாலை சுரைக்காய் பள்ளம் பகுதியில் விவசாய நிலத்தை குத்தகை எடுத்து வேர்க்கடலை பயிரிட்டு வந்துள்ளார். அப்பகுதியில் மான்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் சுந்தரம் நிலத்தில் பல இடங்களில் வயரால் கண்ணிகள் அமைத்து உள்ளார். இரவு அந்த நிலத்திற்கு வந்த ஆண் மற்றும் பெண் புள்ளிமான் ஜோடி கண்ணியில் சிக்கி உள்ளது.  காலை அங்கு சென்ற சுந்தரம் 2 மான்களை கொன்று அதன் இறைச்சியை துண்டுகளாகி விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து சுமார் 40 கிலோ மான் இறைச்சியும், 2 புள்ளி மான்களின் தோல்களும், இறைச்சி வெட்ட பயன்படுத்திய கத்திகள், எடைத்தராசு கம்பிகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் குடியாத்தம் வனத்துறையினர் சுந்தரம் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்