திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

திருப்பூர் குமரனுக்கு சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-01-11 06:08 GMT

சென்னை,

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தாயின் மணிக்கொடி காத்து, தன் உயிரை தாய் நாட்டிற்காக தியாகம் செய்த திருப்பூர் குமரனின் நினைவு தினமான இன்று, அன்னாரை போற்றும் வண்ணம் அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென அஇஅதிமுக சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு உயிர் தியாகம் செய்தவர்களில் முக்கியமானவராக திகழ்பவர் தியாகி திருப்பூர் குமரன். இளம் பருவம் முதலே தேசப்பற்று மிக்கவராக திகழ்ந்த திருப்பூர் குமரன் காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இந்திய நாட்டின் விடுதலைக்காக பல்வேறு அறப் போராட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்க அறப் போராட்டம் தமிழ்நாடு முழுவதிலும் நடைபெற்ற போது, ஆங்கிலேய ஆட்சியின் தடையை மீறி திருப்பூரில் நடைபெற்ற அறப்போராட்டத்திற்கு தியாகி குமரன் தலைமை தாங்கி, தேசியக் கொடியினை ஏந்தி ஊர்வலமாக சென்றபோது, பிரிட்டிஷ் காவலர்கள் தடியடிப் பிரயோகம் செய்தனர். இந்தத் தடியடிப் பிரயோகத்தை மீறி, 'வந்தே மாதரம், வந்தே மாதரம்' என்ற முழக்கத்துடன் முன்னேறிச் சென்றது கொடிகாத்த குமரனின் தலைமையிலான இளைஞர் படை. அப்போது பிரிட்டிஷ் காவலர்கள் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்து கீழே விழுந்த தியாகி குமரன், தான் கடுமையாகத் தாக்கப்பட்டாலும், தான் வைத்திருந்த தேசியக் கொடியைக் கீழே விடாமல் தாங்கிப் பிடித்ததனால் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்பட்டார். இப்படிப்பட்ட மாபெரும் தியாகியின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தேசப் பற்றோடு பங்கேற்று தன் உயிரை நாட்டிற்காக தியாகம் செய்த திருப்பூர் குமரனின் வீரச் செயல் இன்றும் அனைவரின் நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கிறது. இன்றளவும் மக்கள் மனங்களில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கும் கொடிகாத்த குமரனின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது வீர வணக்கத்தினையும், மரியாதையினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாயின் மணிக்கொடி காத்த திருப்பூர் குமரனின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் அவருக்கு மணிமண்டபம் அமைக்க தி.மு.க. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்