மரக்காணம்: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2023-05-14 16:55 GMT

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் நேற்று கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. அந்த கள்ளச்சாராயத்தை அதே கிராமத்தை சேர்ந்த 16 பேர் வாங்கி குடித்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கள்ளச்சாராயம் குடித்த 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்தனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் எக்கியார் குப்பத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜமூர்த்தி (55) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 60 வயது மூதாட்டி மலர்விழி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட மண்ணாங்கட்டி என்பவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக 2 காவல் ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்