கடலூர் மாவட்டத்தில் 3,742 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

கடலூர் மாவட்டத்தில் 3,742 இடங்களில் சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-12 16:40 GMT

கடலூர், 

தமிழகத்தில், ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா கட்டுக்குள் இருந்து வருகிறது. இருப்பினும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாமை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 30-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் 3,742 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி, 12 முதல் 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசியும், 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியும் என சுமார் 42,423 பேருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. ஆனால் பெரும்பாலான மையங்களில் ஆட்கள் வரவில்லை. ஒரு சில மையங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களே வந்ததையும் பார்க்க முடிந்தது.

ஆய்வு

முன்னதாக கடலூர் அருகே பச்சையாங்குப்பம் துணை சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அனைவரும் விடுபடாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.ஆய்வின்போது துணை இயக்குனர் (சுகாதாரம்) மீரா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்