தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் வேளையில் தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-06-12 02:13 GMT

சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே நேற்று 111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை 93.87 சதவீதத்தினர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதேபோல் 83.07 சதவீதம் பேர் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை 11 கோடியே 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் கையிருப்பில் 99 லட்சத்து 56 ஆயிரத்து 665 தடுப்பூசி உள்ளது. தினந்தோறும் 15 முதல் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால், அனைவருக்கும் தடுப்பூசி போட தாமதமாகும் என்பதால் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று ஒரு லட்சம் இடங்களில் தமிழ்நாடு முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இந்நிலையில் 'பூஸ்டர்' தடுப்பூசியானது முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் போடப்படுகிறது, மெகா தடுப்பூசி முகாம்களிலும் அவர்களுக்கு போடப்படும். மேலும் 18 வயது முதல் 59 வயது வரை உள்ள நபர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியின் மூலம் ரூ.388-க்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.


Tags:    

மேலும் செய்திகள்