தமிழகத்தில் பால் விலை உயர்வு எதிரொலி: தேநீர், காபி விலை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், தேநீர் விலை 15 ரூபாய் வரையும், காபி விலை 20 ரூபாய் வரையும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2022-08-12 06:13 GMT

சென்னை,

தமிழகத்தில் தினமும் சுமார் 2¼ கோடி லிட்டர் பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதில் அரசு நிறுவனமான 'ஆவின்' மூலமாக 38.26 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள பாலை தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன.

தனியார் பால் நிறுவனங்கள் அவ்வப்போது விலையை உயர்த்துவது வழக்கம். 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்குக்கு முன்பு தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.6 அதிரடியாக உயர்த்தப்பட்டது. தினசரி பால் உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பதாலும், டீக்கடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை தனியார் பாலையே உபயோகிப்பதால் தனியார் பால் உற்பத்தியாளர்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர், பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயருகிறது.

அதன்படி சீனிவாசா பால் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருக்கிறது. ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த இருக்கிறது. மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளன. அதன்படி லிட்டருக்கு ரூ.4 வரை விலையை உயர்த்த பல தனியார் பால் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தனியார் பால் விலை உயர்வு காரணமாக பால் சார்ந்த இதர பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தநிலையில், இந்த திடீர் விலை உயர்வு ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்க பட கூடும். தனியார் பால் விலை உயர்வால் பால் சார்ந்த தேநீர், காபி உள்ளிட்ட இதர பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காபி, தேநீர் பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்