குறும்படம் எடுப்பதாக வியாபாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த தாய்-மகன்

குறும்படம் எடுப்பதாக வியாபாரியிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த சுஜாதாவை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-10 09:15 GMT

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரசன்னா குமார் (வயது 33). இவர், வண்ணாரப்பேட்டையில் மிட்டாய் கடை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் மூலம் தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகர் 2-வது தெருவை சேர்ந்த சுஜாதா (40), அவருடைய மகன் ரிஸ்வான் (23) ஆகியோர் அறிமுகம் ஆகினர்.

அப்போது பிரசன்னா குமாரிடம், குறும்படம் எடுத்து ஓ.டி.டி. தலங்களில் வெளியிட்டு நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ரிஸ்வான் ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய பிரசன்ன குமார், குறும்படம் எடுப்பதற்காக ரூ.15 லட்சத்தை கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட தாய்-மகன் இருவரும் சொன்னபடி குறும்படத்தை எடுக்காமல் செல்போனை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இந்த மோசடி குறித்து பிரசன்னா குமார் அளித்த புகாரின்பேரில் வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஜாதாவை கைது செய்தனர். பின்னர் அவரை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, சுஜாதாவை ஜாமீனில் விடுவித்தார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவருடைய மகன் ரிஸ்வானை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்