சாமி சிலைகளை திருடிவிட்டு சிலுவையை வைத்த மர்ம நபர்கள்... கடலூரில் பரபரப்பு

விநாயகர், முருகரின் கற்சிலைகளை திருடிச்சென்ற மர்மநபர்கள் சிலுவையை அங்கு வைத்து விட்டு சென்றுள்ளனர்.

Update: 2024-02-03 23:45 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சொக்கநாதர் என்கிற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணப்பாக்கம், கட்டியாம்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு வழக்கம்போல் பக்தர்கள் வந்தனர். அப்போது, அங்கு உள்ள வேப்ப மரத்துக்கு அருகே இருந்த விநாயகர், முருகர் கற்சிலைகளை காணவில்லை. மேலும், வேப்ப மரத்துக்கு அடியில் இருந்த சிவலிங்கத்துக்கு அருகே சிறிய மரப்பலகையால் செய்யப்பட்ட சிலுவை ஒன்றும் வைக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்ததும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். விநாயகர், முருகரின் கற்சிலைகளை திருடிச்சென்ற மர்மநபர்கள் சிலுவையை அங்கு வைத்து விட்டு சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கிராம பொதுமக்கள் மற்றும் கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் தேவா ஆகியோர் புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, அந்தபகுதியினரிடம் விசாரணை மேற்கொண்டனர். மதக்கலவரத்தை தூண்டும் வகையில் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்