கயத்தாறு அருகே விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்

கயத்தாறு அருகே விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-22 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே காற்றாலை வாகனங்களால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், தங்கள் பகுதி சாலையில் அந்த வாகனங்கள் செல்ல தடை விதிக்க கோரி நேற்று விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயம் பாதிப்பு

கயத்தாறு பேரூராட்சி பகுதியான புதுக்கோட்டை கிராமம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான காற்றாலை வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் விவசாய நிலங்களின் வண்டி தடங்கள் வழியாக செல்வதால் இப்பகுதி புழுதி மண்டலமாக மாறியுள்ளது. இதனால் இப்பகுதியில் ஏற்கனவே தென்மேற்கு பருவக்காற்று வீசுவதால் காற்றின் வேகத்தாலும், இந்த புழுதியாலும் இப்பகுதி நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, சீனிஅவரை, மக்காச்சோளம், வெண்டை, கத்தரி, உள்பட அனைத்து பயிர்களிலும் பூக்கள் உதிர்வதுடன், செடிகளும் கருகி விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பகுதி விவசாயிகள் பலமுறை புகார்தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

சாலைமறியல் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த நேற்று புதுக்கோட்டையில் இருந்து கைலாசபுரம், தலையால்நடந்தான்குளம் செல்லும் சாலையில் விவசாயிகள் குடும்பத்தினருடன் காற்றாலை வாகனங்களை மறித்து ஈடுபட்டனர். இந்த சாலையில் காற்றாலை வாகனங்கள் செல்லக்கூடாது என்றும், இந்த வாகனங்களுக்கு தடை விதிக்கும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று கோஷமிட்டனர். இதை தொடர்ந்து இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் சமரசம்

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டனி திலீப் பால் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்ைக எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து காற்றாலை வாகனங்கள் அந்த சாலையில் இயக்கப்பட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்