தேனி அருகேவேன்கள் நேருக்குநேர் மோதல்; டிரைவர் பலி:அய்யப்ப பக்தர்கள் உள்பட 30 பேர் படுகாயம்

தேனி அருகே வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். அய்யப்ப பக்தர்கள் உள்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-12-23 18:45 GMT

கேரளாவுக்கு சுற்றுலா

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிங்காரத்தோப்பு பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கணேசமூர்த்தி (வயது 27). இவர் சொந்தமாக சுற்றுலா வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவருடைய வேனில், சிதம்பரத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் உற்சாகமாக சுற்றிப் பார்த்து விட்டு அதே வேனில் நேற்று முன்தினம் இரவு சிதம்பரத்துக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

அதேபோல், திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஒரு வேனில் சபரிமலைக்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர். அந்த வேனை அதே ஊரைச் சேர்ந்த கணேசன் (50) என்பவர் ஓட்டி வந்தார்.

வேன்கள் மோதல்

திண்டுக்கல்-குமுளி புறவழிச்சாலையில் தேனி அருகே ஆதிப்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, சாலையில் தேங்காய்கள் ஏற்றியபடி ஒரு டிராக்டரின் தொட்டி மட்டும் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த தொட்டியில் எச்சரிக்கை குறியீடு, ஒளிரும் பட்டைகள் எதுவும் இல்லை. இதனால் வேனை ஓட்டி வந்த கணேசன், அந்த டிராக்டர் தொட்டி மீது மோதாமல் இருக்க வலதுபுறம் திருப்பி கடக்க முயன்றார்.

அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த வேன், எதிரே ஆலப்புழாவில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டு இருந்த சுற்றுலா பயணிகளின் வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இரு வேன்களின் முன்பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. அவற்றில் பயணம் செய்தவர்கள் அபய குரல் எழுப்பினர்.

டிரைவர் சாவு

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்க, தீயணைப்பு துறைக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். தேனி தீயணைப்பு படை வீரர்களும் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் இரு வேன் டிரைவர்கள் மற்றும் அவற்றில் பயணம் செய்த மொத்தம் 31 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேன்களின் முன்பகுதி நொறுங்கியதால் டிரைவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு டிரைவர்கள் மீட்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனின்றி டிரைவர் கணேசன் பலியானார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயம் அடைந்தவர்கள்

இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் வந்த வேனில் பயணம் செய்த சிதம்பரத்தை சேர்ந்த அப்துல்நசீர் (54), இஸ்மாயில் மரக்காயர் (71), பாத்திமாமுத்து (46), ஜல்லீனா (22), காஜா (45), ஆதில்லா பானு (45), மதீனா பீவி (40), அமீர் (41), இமாமைதீன் (18), தக்வி முனிஷா (56), நூர்பர்வீன் (45), சம்சுல்ஹிதா (58), முகமது ஹரீஷ் (12), ஜமன் (15), ஹர்ஷத் (18) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

மற்றொரு வேனில் வந்த அய்யப்ப பக்தர்களான திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த சரவணன் (45), யோகநாதன் (38), இளங்கோ (51), புதுக்கோட்டை மலையடிபட்டியை சேர்ந்த நல்லயன் (48), அருள்முருகன் (48), தமிழரசன் (27), மன்னார்புரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (39), ஏகாம்பரம் (48), அருண்குமார் (33), ஜெகன் (20), பிரகாஷ் (36), மற்றொரு அருண்குமார் (19), பெரியநாயகம் (18), பழனிச்சாமி (49) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அஜாக்கிரதையாக டிராக்டர் தொட்டியை நிறுத்திச் சென்ற அதன் உரிமையாளர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்