வடமதுரை அருகேவீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் மறியல்:போக்குவரத்து பாதிப்பு

வடமதுரை அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-02 18:45 GMT

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதன்படி வடமதுரை பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. இந்த நிலையில் எஸ்.புதுப்பட்டி கிழக்கு காலனி குடியிருப்பு பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

இதனால் விடிய, விடிய பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை அய்யலூர் கடவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோஷமிட்டனர். போராட்டத்தின்போது அந்த வழியாக வந்த மாமரத்துப்பட்டி, தரகம்பட்டி பாலவிடுதி செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

சாலை மறியல்

இதுகுறித்து தகவலறிந்த சுக்காம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன், துணைத் தலைவர் சுப்பிரமணி, செயலாளர் குமரவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகாதவாறு ஆழமான வாய்க்கால் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் வாய்க்கால் அமைத்து தருவதாக தெரிவித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், உடனடியாக வாய்க்கால் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்