'தினத்தந்தி' செய்தி எதிரொலி; தூய்மை பணியாளர்கள் குடியிருப்பில் சீரமைப்பு பணி

தினத்தந்தி செய்தி எதிரொலியாக தூய்மை பணியாளர்கள் குடியிருப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.;

Update:2022-12-07 22:32 IST

தேனி அல்லிநகரத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடம் சேதம் அடைந்தும், அப்பகுதியில் சுகாதாரக்கேடாகவும் காட்சி அளித்தது. குடியிருப்பு சுவரில் கை வைத்தாலே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தது. மேலும் அங்கு மின்மீட்டர்கள் வைத்துள்ள பெட்டிகள் குழந்தைகள் தொடரும் உயரத்தில் தாழ்வாக உள்ளதோடு, அவை மூடப்படாமல் திறந்த நிலையில் இருந்தது. மேலும் அங்கு தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் இன்றி, ஆபத்தான சூழலில் வாழ்வது குறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், கட்டிடத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்பேரில், நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கட்டுமானம் பெயர்ந்து விழுந்து காங்கிரீட் தூண்கள் வெளியே தெரிந்த பகுதிகளில் சிமெண்டு கலவையால் பூசப்பட்டது. மேலும், புதிதாக குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன. ஆபத்தான நிலையில் இருந்த மின்மீட்டர்களை மறைத்து மரப் பலகையால் மூடி போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்த ஆய்வு நடத்தி அங்கு வசிப்பவர்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்