மணல், ஜல்லிக்கற்கள் கொண்டு செல்ல உரிய அனுமதி சீட்டு வழங்குவது இல்லை

மணல், ஜல்லிக்கற்கள் கொண்டு செல்ல உரிய அனுமதி சீட்டு வழங்குவது இல்லை என்று பொள்ளாச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கிரசர் நிறுவனங்கள் மீது லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.

Update: 2023-06-08 19:30 GMT

பொள்ளாச்சி

மணல், ஜல்லிக்கற்கள் கொண்டு செல்ல உரிய அனுமதி சீட்டு வழங்குவது இல்லை என்று பொள்ளாச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கிரசர் நிறுவனங்கள் மீது லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.

ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி பகுதியில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமுறைகளை மீறும் லாரிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் டிரைவர்களையும் கைது செய்கின்றனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். இதில் புவியியல் மற்றும் சுரங்கதுறை உதவி இயக்குனர் சசிகுமார், தாசில்தார் வைரமுத்து, நேர்முக உதவியாளர் அரசகுமார், துணை தாசில்தால் சரவணன் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

அனுமதி சீட்டு

கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் பேசும்போது, கிரசர் நிறுவனங்களில் உரிய அனுமதி சீட்டு கொடுப்பதில்லை. இதனால் ஜி.எஸ்.டி. ரசீதுகளை வைத்து பொருட்களை கொண்டு செல்ல வேண்டி உள்ளது. டிரைவர்களை கைது செய்வதால் வேலைக்கு வர பயப்படுகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 40 ஆயிரம் யூனிட் கட்டுமான பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு கொண்டு செல்ல அனுமதி சீட்டு கிடைக்கிறது. ஆனால் உள்ளூருக்கு கிடைப்பது இல்லை.

கேரளாவுக்கு அதிகமாக கொண்டு செல்வதால், உள்ளூரில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஒரு முறை பயன்படுத்தும் அனுமதி சீட்டை பலமுறை பயன்படுத்துகின்றனர் என்றனர்.

உரிய நடவடிக்கை

சப்-கலெக்டர் பிரியங்கா பேசும்போது, கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்துவதாக புகார் வருகிறது. இதன் காரணமாக அடிக்கடி வாகனங்கள் தணிக்கை செய்து விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாமல் கொண்டு சென்றால்தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவுக்கு அதிகமாக மணல், ஜல்லி கற்கள் கொண்டு செல்வது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்