பீகாரில் இருந்து சென்டிரல் வந்த ரெயிலில் கஞ்சா புகைத்த வடமாநில தொழிலாளி சாவு

Update: 2023-08-09 04:52 GMT

சென்னை,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேந்திர பாசுவான் (வயது 40). இவர் நேற்று முன்தினம் பீகார் மாநிலம் கயா ரெயில் நிலையத்தில் இருந்து சென்டிரல் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினார். ரெயிலில் ஏறிய பின்னர் அளவுக்கு அதிகமாக கஞ்சா புகைத்துக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், ரெயிலில் வந்து கொண்டிருந்தபோதே அவர் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். இந்த நிலையில் சுரேந்திர பாசுவானின் நண்பர்கள் அவருக்கு வாந்தியை கட்டுப்படுத்த குளிர்பானம் வாங்கி கொடுத்து ரெயிலில் அழைத்து வந்துள்ளனர். விஜயவாடா ரெயில் நிலையம் வரும்போது பாசுவான் அளவுக்கு அதிகமாக வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனால், நண்பர்கள் அவரை மயக்க நிலையிலேயே தனி இருக்கையில் படுக்க வைத்து சென்டிரல் ரெயில் நிலையம் அழைத்து வந்தனர். நேற்று காலை 6.30 மணியளவில் சென்டிரல் வந்ததும் ரெயில் நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்திற்கு பாசுவானை கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்