சம்பா நடவு பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரம்

சம்பா நடவு பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

Update: 2023-10-09 20:46 GMT

மணப்பாறை:

சம்பா சாகுபடி

தைத்திருநாளன்று தங்கள் வயலில் விளைந்து, அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் மூலம் பெறப்பட்ட அரிசியில் பொங்கலிட்டு, இயற்கைக்கு விவசாயிகள் நன்றி தெரிவிப்பார்கள். அவ்வாறு தை மாதத்தில் நெல் அறுவடை செய்ய வேண்டும் என்றால், அதற்கு புரட்டாசி மாதத்தில் நடவு செய்ய வேண்டும். அதனால் இந்த காலகட்டத்தில் தான் சம்பா நடவு செய்வார்கள். ஆரம்ப காலங்களில் விவசாய நிலங்கள் வைத்திருந்த விவசாயிகளில் 99 சதவீதம் பேர் விவசாயம் செய்தார்கள். ஆனால் போதிய பருவமழை இன்றி, நீர்நிலைகள் வறண்டு, ஆழ்குழாய் கிணறுகளிலும் நீரின்றி போனதால் விவசாயம் என்பது பொய்த்து போய்க்கொண்டே இருக்கின்றது.

இருப்பினும் சில இடங்களில் இருக்கும் நீரின் அளவை பொறுத்து விவசாயிகள் தங்களின் விவசாயத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது என்பது மிகவும் சிரமமாகி விட்டது. இதுமட்டுமின்றி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் உழவு ஓட்டி, வரப்பு கட்டி, பயிர் நடவு செய்து, இடையில் களை பறிக்க ஆட்கள் தேவை என்றால் அதற்கு கடும் போராட்டமான நிலையே உள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிக்கு பெரும்பாலானோர் சென்று விடுவதால், விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

வடமாநில தொழிலாளர்கள்

இந்நிலையில் மாவட்டத்தில் மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஆகிய தாலுகா பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியே உள்ளனர். ஆனால் பல இடங்களில் தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாத நிலையில், சில இடங்களில் மட்டும் விவசாயம் நடைபெற்று வருகிறது. அதன்படி மணப்பாறையை அடுத்த மரவனூர், தெற்கு சேர்பட்டி, சமுத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பயிரை எடுத்து நடவு செய்வது வரை ஒரு ஏக்கருக்கு ரூ.4,500 பெற்றுக் கொண்டு விவசாயப் பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 8 முதல் 10 ஏக்கர் வரை வேகமாக நடவு செய்கின்றனர். இதற்காக 10 முதல் 15 நபர்கள் வரை ஒவ்வொரு குழுவாக பிரிந்து சென்று பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எந்திரத்தில் எப்படி நடவு செய்கிறோமோ, அதை விட வேகமாக பயிர்களை நடவு செய்கின்றனர். விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் சொல்கிறபடி நடவு செய்கின்றனர்.

பள்ளி மாணவ-மாணவிகள்

நடவு பணிகளை தொடங்கும் முன் அந்த இடத்தின் அளவு என்ன? என்பதை ஒரு அளவீட்டு கருவி மூலம் அளந்து அதன் பின்பு கூலித்தொகையை நிர்ணயம் செய்து பணியை தொடங்கி விடுகின்றனர். பணிகள் முடிந்த பின்னர் கூலித்தொகையை பெற்றுச்செல்கின்றனர். இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்களை பொறுத்தவரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒன்று சேர்ந்த விவசாய பணிகள் ஈடுபடுகின்றனர். வடமாநில தொழிலாளர்கள் நடவு செய்வதால் ஏக்கருக்கு குறிப்பிட்ட தொகை வரை மிச்சமாவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி தற்போது சம்பா நடவிற்கு சரியான காலம் என்பதால் விடுமுறை நாட்களில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சம்பா நடவு பணி தீவிரம் அடைந்துள்ளதுடன், மக்கள் வருகிற பொங்கலை சிறப்பாக கொண்டாடிட நெல் நடவு அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற நேரங்களில் விவசாய பணிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்