தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ்
கோவையில் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி, தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய காசாளரை போலீசார் கைது செய்தனர்.;
கோவை,
கோவையில் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி, தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய காசாளரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தனியார் நிறுவன பெண் ஊழியர்
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் 38 வயது பெண். இவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் எனது நிறுவனத்தில் காசாளராக எஸ்.எம்.பாளையத்தை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 55) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
ஆபாச மெசேஜ்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது சம்பளத்தில் ரூ.3 ஆயிரம் உயர்த்தி தருவதாகவும், அதற்கு தனது ஆசைக்கு இணங்குமாறு என்னை அழைத்தார். நான் உடனே அவரை கண்டித்து, செல்போன் இணைப்பை துண்டித்தேன்.
ஆனால் அவர் விடாமல் மீண்டும் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு சினிமாவுக்கு செல்லலாம் வா என அழைத்தார். அப்போதும் நான் மறுத்து விட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் எனக்கு ஆபாசமாக மெசேஜ் (குறுஞ்செய்தி) அனுப்பி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
காசாளர் கைது
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி தனியார் நிறுவன காசாளர் பார்த்தசாரதியை கைது செய்தனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.