ஊராட்சி மன்ற பெண் தலைவர், கணவர் மீது வழக்கு

சுகாதார வளாக இரும்பு கதவு, ஒயர்களை எடுத்து சென்றதாக ஊராட்சி மன்ற பெண் தலைவர், அவரது கணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-17 17:58 GMT

அணைக்கட்டு ஒன்றியம் தோளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பின்னர் சரியான பராமரிப்பின்றி கட்டிடம் பழுதடைந்ததது.

பழுதடைந்த இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிதாக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் திட்டமிட்டனர். அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி ஊராட்சி மன்ற பெண் தலைவர் கல்பனா மற்றும் அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் உரிய அனுமதியில்லாமல் பொக்லைன் எந்்திரம் மூலம் பொது சுகாதார வளாக கட்டிடத்தை இடித்துள்ளனர்.

மேலும் அஅதில் இருந்த இரும்பு கதவுகள் மற்றும் கேபிள் ஒயர்களை அவர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதேப் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் என்பவர், ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவரது கணவருடன் சேர்ந்து கதவு மற்றும் ஒயர்களை திருடிச்சென்றதாக வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா, அவரது கணவர் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கதவு, ஒயர்களை திருடிச்சென்றதாக ஊராட்சி மன்ற பெண் தலைவர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர் கல்பனா முறைகேடாக சாதி சான்றிதழ் கொடுத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றததாக அவர் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

மேலும் செய்திகள்