குடும்பத்துடன் படகு சவாரி செய்து பயணிகள் உற்சாகம்

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குடும்பத்துடன் படகு சவாரி செய்து பயணிகள் உற்சாகமடைந்தனர்.

Update: 2023-07-30 18:45 GMT

பரங்கிப்பேட்டை, 

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட பிச்சாவரத்தில் மாங்குரோவ் காடுகள் உலகப்புகழ் வாய்ந்தது. இங்குள்ள ஆற்று நீரும், கடல் நீரும் கலக்கும் இடத்தில் சுரப்புன்னை மரங்கள் வளர்ந்து சிறு, சிறு குட்டி தீவுகளை போன்று காட்சி அளிக்கிறது. இங்குள்ள சுரப்புன்னை காடுகளில் ஏராளமான பறவைகளும் கூடு கட்டி வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வானத்தில் வட்டமடித்து வருவதையும் காணலாம். சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில்மிகுந்து காணப்படும் பிச்சாவரம் சுற்றுலா மையத்தை பார்வையிட உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநிலங்கள், வெளி நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வந்து செல்கிறார்கள்.

இது தவிர சில வெளிநாட்டு மந்திரிகளும் பிச்சாவரத்தை காண வருகின்றனர். நேற்று முன்தினம் இங்கிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரி தெரேசா அனே கபே பிச்சாவரத்துக்கு வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் இருளர்களின் வாழ்க்கை முறையை கேட்டறிந்த அவர் படகில் சென்று மங்குரோவ் காடுகளின் இயற்கை அழகை கண்டு ரசித்தார்.

விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலா மையத்தில் கூட்டம் களை கட்டும். அந்த வகையில் விடுமுறை நாளான நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வாகனங்களில் வந்திருந்தனர். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சுற்றுலா மையம் பரபரப்புடன் காணப்பட்டது.

படகு சவாரி செய்வதற்காக டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்தனர். பின்னர் குடும்பத்துடன் படகுகளில் சவாரி செய்து சுரப்புன்னை மரங்களின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். அப்போது சிலர் தங்கள் செல்போனில் செல்பி எடுத்தனர். சுரப்புன்னை மரங்களின் வேர், இலை, கிளை ஆகியவற்றை வியப்புடன் பார்த்தனர்.

பின்னர் கரை திரும்பிய பயணிகள் சுற்றுலா மைய வளாகத்தில் உள்ள கடல் கன்னி சிலை முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வளாகத்தில் உள்ள குடில்களில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு மற்றும் தின்பண்டங்களை உண்டு மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா மைய மேலாளர் தினேஷ்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்