கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 2-வது நாளாக பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்

இன்று கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், போதிய அளவில் பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Update: 2024-02-10 23:46 GMT

சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்களும், ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த சூழலில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் திடீரென நேற்று இரவில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சிக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

மேலும், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பரபரப்புடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் நேற்று உறுதி அளித்தனர்.

இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இன்றும் தென் மாவட்டங்கள் மற்றும் விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளுக்கு போதிய அளவில் பேருந்துகளை இயக்கவில்லை எனக்கூறி 2-வது நாளாக பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிய நிலையில், போதிய அளவில் பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பயணிகளிடம் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக 2-வது நாளாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் பரபரப்புடன் காணப்படுகிறது.  

 

Tags:    

மேலும் செய்திகள்