தகுதிச்சான்று இல்லாத ஆம்புலன்சுக்கு அபராதம்
திருச்செங்கோட்டில் தகுதிச்சான்று இல்லாத ஆம்புலன்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
எலச்சிபாளையம்
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் உத்தரவின் பேரில் திருச்செங்கோடு வேலூர் செல்லும் சாலையில் வாகன சோதனை நடைபெற்றது. இந்த வாகனச் சோதனையை திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா மேற்கொண்டார். இச்சோதனையின் போது தகுதி சான்று புதுப்பிக்காமல் இயக்கிய ஆம்புலன்சுக்கு அபராதம் விதித்தனர். இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா கூறும் போது, அவசர கால வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் அந்த வாகனங்களின் அனுமதி சான்று, காப்பு சான்று, தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளை நடப்பில் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் வாகனங்களை இயக்குவது கண்டறிந்தால் அந்த வாகனங்கள் சிறைபிடிக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும் கண்கள் கூசும் கூடுதல் முகப்பு விளக்குகள், அதிக ஒலி எழுப்பும் ஹாரன், பல வண்ண எல்.இ.டி. விளக்குகள் கூடுதல் பம்பர்கள் ஆகியன வாகனங்களில் பொருத்தக் கூடாது என்றும், அவ்வாறு இருந்தால் அவை அகற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.