இந்தியாவை மீட்பதற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஓர் அணியில் திரளவேண்டும் -கே.எஸ்.அழகிரி

புதிய நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை மீறி கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Update: 2023-12-15 22:15 GMT

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதிய நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பை மீறி கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இதே பா.ஜனதா ஆட்சியில் நாடாளுமன்றம் தாக்குதலுக்கு இறையாகி 9 பேர் பலியான துயரச் சம்பவம் நடந்த அதே நாளில் மீண்டும் இத்தகைய கொடிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இது மோடி ஆட்சியின் மீது படிந்த அழிக்க முடியாத கறையாகும்.

பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் இதற்கான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று குரல் எழுப்பிய எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், கனிமொழி, சுப்பராயன், ஜோதிமணி உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 14 எம்.பி.க்கள் எஞ்சியிருக்கிற நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில், கலர் குண்டு தாக்குதலில் ஈடுபட்டவருக்கு மக்களவைக்கு உள்ளே நுழைய அனுமதிச் சீட்டு வழங்கிய மைசூர் பா.ஜனதா எம்.பி., பிரதாப் சின்கா மீது இதுவரை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடி, ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரியைப் போலச் செயல்படுவதால் தான் நாடாளுமன்றம் இத்தகைய தாக்குதலுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய பேராபத்தில் இருந்து இந்தியாவை மீட்பதற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்