ஹைட்ரோ கார்பன் சோதனைக்கிணறுகள் அமைக்க அனுமதி மறுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தின் வளத்தை பாதிக்கின்ற ஓஎன்ஜிசி-யின் செயலுக்கு துணை போகாமல் அனுமதி மறுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2023-11-06 23:22 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக்கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக இந்த திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தடி நீரும், பெருமளவு விவசாய நிலங்களும் பாதிப்படைவதை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு எனது தலைமையிலான கடந்த அதிமுக அரசில் காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அத்தகைய நச்சுத் திட்டங்களால் தமிழகம் ஒருபோதும் பாதிப்படையா வண்ணம் முற்றுப்புள்ளி வைத்தேன்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஒஎன்ஜிசி நிறுவனம் அனுமதி கேட்டிருப்பது ஏற்புடையதல்ல. இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது முந்தைய ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு, படித்து பார்க்காமல் கையெழுத்திட்டுவிட்டேன் என பின்னர் மாற்றிக்கூறிய வரலாறு உண்டு, ஆகவே கடந்த காலத்தை போல முதல்வர் மு.க.ஸ்டாலின் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ள கூடாதெனவும், தமிழகத்தின் வளத்தை பாதிக்கின்ற ஓஎன்ஜிசி-யின் இந்த செயலுக்கு துணை போகாமல் ஆரம்ப நிலையிலேயே உடனடியாக அனுமதி மறுக்க வேண்டுமெனவும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்